மரணத்திற்குப் பின் வாழ்க்கை
ஒரு இமாலய அனுபவம்
மரணத்திற்குப் பின் வாழ்க்கை
ஒரு இமாலய அனுபவம்
ஒரு டஜன் டிகிரிகள் வைத்து இருந்த போதிலும், 29 ஜூலை 2024 அதிகாலையை விட எனக்கு எதுவும் அதிகம் கற்பிக்கவில்லை. அதிகாலை இரண்டு மணியளவில், பூஜ்யத்திற்கும் குறைவான தட்ப வெப்ப நிலை, தொடர்ச்சியான கனமழை , 18000 அடி உயரத்தில் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரமாக சிக்கிக்கொள்வது கண்டிப்பாக வாழ்க்கையின் பாடங்களை கற்றுத்தரும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். ஆக்கிசன் (O2) அளவும் குறைவு. உடலின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் நனைந்து, குளிரில் நடுங்கி, பசி மயக்கத்தில் சுவாசிக்கக் கூட முடியவில்லை - 10 கிமீ சுற்றளவிற்கு மருத்துவ வசதி, தங்குமிடம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், வாழ்க்கை 99.99% முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏற்கனவே 3 நாட்கள் 35 கிமீ, 10000 அடி உயரம் நடந்து, அரைகுறை தூக்கத்துடன், பூஜ்ஜிய நம்பிக்கையுடன் சோர்வுற்ற உடல் சாவை எதிர்நோக்கி இருந்தது. வலிப்பு தான் (paraoxsm)அடுத்த நிலை . வரும் பட்சத்தில் யாராலும் மீட்க முடியாது. கிட்டத்தட்ட எல்லாம் முடிந்துவிட்டது. ஜான் கிராமத்திற்கு (அருகிலுள்ள மோட்டார் வாகன வசதி உள்ள இடம்) சடலத்தை எடுத்துச் செல்ல 10 லட்சம் ரூபாய் தேவை.
மரணத்தின் முனகலைக் கேட்டு மெதுவாக மழைக் கடவுள் கருணை காட்டினார். ஆனால் எனக்கு சக்தி கொஞ்சமும் இல்லை. கொஞ்சமாவது இளைப்பாற பார்வதி பாக்கிற்கு 10 கிமீ செல்ல வேண்டும். அந்த 10 கிமீ - வழுக்கும் பாறைகள், பனி மலைகள் மற்றும் சிறிய நீரோடைகளைக் கடக்க வேண்டும். மனிதன் , பூமியில் நடந்து சென்ற பாதைகளில் மிகவும் கடினமான பாதை அதுவாகத்தான் இருக்கும்.
இடதுபுறத்தில் இருந்து முதல் நபர் - Vetrickarthick
அடுத்த நான்கு மணி நேரம் என் வாழ்க்கையின் திருப்புமுனை. ஆற்றல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. தடைகளை ஒவ்வொன்றாகத் தாண்டினேன் - பலமுறை கீழே வழுக்கி விழுந்தேன் - எனது மொபைல் ஃபோன் உடைந்தது - என் வாக்கிங் ஸ்டிக்கை தொலைத்தேன் - என் சன் கிளாஸ் உடைந்தது - என் ஈரமான சாக்ஸை தூக்கி எறிந்தேன் - முற்றிலும் நனைந்த குல்லாகளையும், தெர்மல் உடைகளையும் களைந்தேன். பார்வதி பாக் நோக்கி அங்குலம் அங்குலமாக நடந்தேன் . ஏறக்குறைய 12 மணி போராட்டத்திற்குப்பின் பார்வதி பாக் சென்றது , வாழ்க்கையின் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. மற்றொரு 3 மணி நேரப் பயணத்தில் நான் பீம் திவாரை அடைந்ததும், மெதுவாக என்னை 99.99% இறப்பு விகிதத்திலிருந்து 100% உயிருடன் மாற்றியது. புதிய ஆற்றல் பிறந்தது - உன்னால் மரணத்தை எதிர்கொள்ள முடிந்தால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை.
காளி டாப்பிலிருந்து அதே நாளில், இரவு 8 மணிக்குப் பிறகு ஜான் கிராமத்திற்கு தனியாளாக இருண்ட இரவில் மலை இறங்கத் திட்டமிட்டேன், அது உண்மையில் தற்கொலை முடிவு. சில நூறு மீட்டர் மலையேற்றத்திற்குப் பிறகு, நான் பாதையை இழந்தேன். இரண்டு வழிகள் மட்டுமே - ஒன்று இருண்ட காட்டில் எங்காவது காணாமல் போவது அல்லது சில காட்டு விலங்குகளுக்கு உணவாகுவது. அதிர்ஷ்டவசமாக உள்ளூர் கிராம மக்கள் இருவர் கீழே இறங்கி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பான இடத்திற்கு என்னை கொண்டு வந்தனர்.
இரண்டு முறையும் ஒரே நாளில் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழ்க்கையில் மேல்நோக்கி செல்ல இதுபோன்ற மரணங்கள் தேவை.