என் கணவனின் இழப்பில்
என் கணவனின் இழப்பில்
ஒருபக்கம் திருமணம் புரிந்து இரண்டாம் மகனை பெற்ற ஒன்றறை வருடங்களில் தன் கணவனை இழந்ததும் மொத்த அன்பையும் மகனின் மேல் பொழிந்து வளர்த்து ஆளாக்கி, மகனிற்கு திருமணம் வந்ததும் ஆனந்தப்படுவதைக் காட்டிலும் தன்னை விடுத்து இன்னொருவள் தன் மகனை ஆளப் போகிறாள் என்ற ஒரு தாயின் வேதனையும்
மறுபக்கம் தகப்பனை இழந்து தமையனும் தாயும் தம் அது வழிகளில் செல்ல தனக்கென ஒருவர் உண்டோ என்ற கேள்விக்கு பதிலாய் ஒருவன், என் கணவன் கிடைத்தான் என்ற களிப்பில் நானும். அன்பை வாரி இரைத்து வாரி வாரி இரைத்து வாலியும் சோர்ந்து நானும் சோர்ந்து, எனக்கென உயிராய் கிடைத்த என் மகளின் பக்கம் திரும்பியது எனது அன்பின் திசை!
திரும்பிய திசை திரும்பிய பக்கம் இருக்க தன் மகனை ஆளப் பிறந்தவள் தள்ளி நிற்பதில் தனக்கொரு ஆதாயம் தேடி சகுனியாய் தன் வேடத்தை முறுக்கேற்றினாள் என் மாமியாள்.
கேட்க ஒருவரும் இல்லை என்று ஆனந்தத்தில் திளைத்த என் கணவனின் மனம், பின் தன்னைக் கேட்க ஒருவருமே இல்லை என்று ஏங்கியதை உணர்ந்ததும் திரும்பியது என் மனம் அவர் பக்கம்.
அன்பு ஒரு பக்கம் பெருக்க, சகுனியின் மேல் வெறுப்பு ஒரு பக்கம் வளர்க்க இந்திய பாகிஸ்தான் நடுவில் சிக்கிய கஷ்மீராக தடுமாறியது என் மணாளனின் மனம்.
என் வீடு என் கணவன் எனும் இருக்கைக்கு மூலமான என் மாமியாளை ஒருமையில் ஒதுக்கி பகைத்துக் கொண்டது, ஒருவகையில் தனக்கென ஒரு தனி அடையாளம் கொடுத்த இந்தியாவிடமே தன் தீவிரவாத எண்ணத்தைக் கொண்ட பாகிஸ்தானின் சுயநலப் போக்கு என்னுள்ளும் இருப்பதாகவே உணர்கிறேன்!