கவலைகொள்ளாதீர்கள் நான் இங்கு சுயநலத்தை விளக்கப்போவதில்லை மாறாக சுயநலம் பற்றிய என்னுடைய சிந்தனைகள், என் வாழ்வில் நான் பார்த்தவைகள், நான் கேட்டவைகள், நான் அனுபவித்தவைகளின் ஒரு சின்ன வெளிப்பாட்டினையே காண்போம்.
நான் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சுயநலவாதியாக இருந்து இன்னும் பன்மடங்கு பெரிய சுயநலவாதியாக மாறி உள்ளேன். அது எப்படி நிகழ முடியும் நண்பரே என்கிறீர்களா? என்னை தொடருங்கள் கூறுகின்றேன்.
என் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஒரு பருவத்தில், தினமும் மாலை ஆறரை மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கதைகளின் கதை" தொடரை பார்ப்பதுண்டு. அதில் சாதனையாளர்கள் யாரேனும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை மிகவும் உணர்ச்சி பூர்வமாக புல்லரிக்க வைப்பது போலும் கூறுவார்கள். எடுத்துக்காட்டாக உலகின் பெரும் பணக்கார முதலைகளான பில் கேட்ஸ், எலன் மஸ்க், வாரன் பஃபெட் மற்றும் மக்களுக்காக வாழ்ந்த காமராஜர், முற்போக்கு சிந்தனையாளரான பெரியார், அரசியல் வாதிகளான ராகுல் காந்தி, மோடி ஆகியோரை பற்றியும் பேசுவார்கள். இவர்கள் யார் மீதும் வராத ஈர்ப்பும் மரியாதையும் அவர் மீது வந்தது அவர்தான் கம்யூனிஸ்டுகளின் கடவுள் கார்ல் மார்க்ஸ் அதுவே அந்த காணொளியின் பெயரும்.
எவ்வாறு ஒரு மனிதன் இத்தனை தன்னலமற்று இருக்க முடியும் என்று என்னுள் எழுந்த கேள்வியை வலுப்படுத்தும் விதமாக இருந்தது அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள். குறிப்பாக இறந்த தன் மகனின் உடலுக்கு சவப்பெட்டி வாங்கக்கூட பணம் இல்லாதபோதும் அவர் தன்னலமற்று திகழ்ந்தார்.
அப்போது அவர் நண்பர் ஏங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுட்டிருந்தார்
இந்த பயங்கரமான துயரத்தின் இடையிலும் உங்களது நட்புறவு பற்றிய சிந்தனைகளும் இந்த பூமியில் நாம் இருவரும் புரிய வேண்டிய அறிவுப்பணி இன்னும் இருக்கின்றது என்ற திடநம்பிக்கையுமே என்னை நிலைநிறுத்தியுள்ளன - கார்ல் மார்க்ஸ்
மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-மன்றத்தில் அமைந்துள்ள கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரீட்ரிக் ஏங்கல்ஸின் சிலைகள்
இது பொதுநலத்தின் உச்சமாக இருக்கும் நிலையில், இத்தகைய மனப்பாங்கு எவ்வாறு உருவாகியிருக்கும் என்று சிந்தித்தோமேயானால் நான் வாழ்வியல் ரீதியாக உணர்ந்த ஒன்று நினைவில் வருகின்றது. எனக்கு எதன் மீதாவது கோபம் என்றால் அது சமூகத்தின் நிலை காரணமாக இருக்கலாம் அல்லது என் வீட்டின் நிலை காரணமாக இருக்கலாம் அது என்னை தூங்க விடாமல் உறுத்தி கொண்டே இருக்கும். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், வீட்டில் பிரச்சனை என்றாலும் நான் சிந்திப்பதோ அதை பற்றி மட்டும் தான். எனவே கார்ல் மார்க்ஸின் தன்னலமற்ற சிந்தனைக்கு தொழிலாளிகள் கொடுமை படுத்தப்படுவதை கண்டெழுந்த கோபமாக இருக்கலாம்.
சமுதாயத்தையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்து பார்த்தீர்களேயானால், நீங்கள் ஒரு பொதுவான நபரை பார்த்திருப்பீர்கள் அவர் உருமாற்றம் என்னும் நூலில் வரும் கிரிகோர் சம்சா உடன் ஒத்து போவார் அவர் வேறுயாரும் இல்லை உங்கள் சந்தோஷத்திற்காக நூற்றைந்து டிகிரி காய்ச்சல் அடித்தும் வேளைக்கு செல்லும் அப்பா, மாதவிடாய் வலி இருந்தும் உங்களை மெத்தையில் இருந்து கீழேயிறங்க விடாமல் பெட் காபி கொடுக்கும் அம்மா, தனக்கென இலக்குகள் இருந்தும் குடும்ப பொறுப்பெடுக்கும் அக்கா மற்றும் அண்ணன்கள். அந்நூலில் வரும் கிரிகோர் சம்சா ஒரு நாள் காலையில் திடீரென ஒரு பெரிய கரப்பான்பூச்சியாக எழுகிறான். உடனே தனது தோற்றத்தை பற்றி கவலைகொள்ளாதவன், தனது அசையாமை உணர்ந்து கவலைகொள்ளாதவன், தனது பசி மற்றும் வலி உணர்ந்து கவலைகொள்ளாதவன் நான் வேளைக்கு செல்ல முடியாதே குடும்ப செலவிற்கு என்ன செய்வார்கள், அவன் அம்மா, அப்பா, தங்கை நேற்று வரை உண்டுவந்த சுவையான உணவிற்கு எங்கே போவது, தங்கை விருப்பப்பட்ட இசை பயிற்சி பள்ளிக்கு எவ்வாறு செல்வாள் என்று கவலைகொள்கிறான்.
இதுதான் பல வீடுகளில் இருக்கும் சிந்தனைப்போக்கு. இவர்கள் எல்லோரும் தங்களது குழந்தைகளின் தம்பிதங்கையரின் தேவைக்காக உழைப்பதிலோ வருத்தம் கொள்வதிலோ ஆச்சிரியம் இல்லை அனால் இவர்களில் பலர் குடும்பத்தின் ஆசைக்காக உழைக்கிறார்கள். அது எப்படி?
நாம் கல்லூரி செல்லும் மாணவமனைவியர்கள் எதை வேண்டுமானாலும் சகித்து கொண்டு வேலை செய்வோம் ஆனால் நமது மரியாதைக்கு இழுக்கு என்றால் சட்டென்று விளைவுகளை பற்றி சிந்திக்காமல் கோபம் கொள்வோம். ஐம்பது வயதாகிய அப்பாக்கள் இருபத்தைந்து வயதாகிய மேனேஜரிடம் கசப்பான வார்த்தைகளால் வசவுவாங்குகின்ற பொழுது மௌனம் காக்கிறார்களே அது எப்படி?
ஒருவேளை இவர்கள் அனைவரும் சமூகத்தின் எதிர்பார்ப்பால் அதாவது நீ அப்பாவாக இருந்தால் இவை அனைத்தையும் நீ செய்தாக வேண்டும் என்கிற மாயையில் சிக்கி செயல்படுகிறார்களா, அது காரணமானால் அவர்கள் சோகத்துடன் காணப்படவேண்டுமே ஆனால் வீட்டில் என்னை பார்க்கும் என் அப்பா புன்னகைக்கிறாரே அது எப்படி?
அப்பாக்கள் ஒருபோதும் குழந்தைகளை கீழே இறக்கிவிட விரும்புவதேயில்லை
உண்மையில் சமூகத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் இருக்கும் இந்த அக்கறை கோவத்தினாலோ அல்லது கட்டையத்தினாலோ அல்ல அன்பினால்! கார்ல் மார்க்ஸ் உலக மக்களை நேசித்தார், என் அப்பாவும் அம்மாவும் அண்ணனும் என்னை நேசிக்கிறார்கள்.
இதை இந்த கோணத்திலும் பார்க்கலாம்
நான் வாசித்ததும் என் தோழி யோசித்ததும், ஒருவனுக்கு மற்றவர் சந்தோசமாக இருப்பதில்தான் சந்தோசம் என்றால் அவன் அவர்களுக்காக வேர்வை சிந்தினாலும் அவர்களின் சந்தோசம் அதை மறக்கச்செய்யும். உழைக்கும் அண்ணனை எடுத்துக்கொண்டால் அவன் வீடு திரும்பும் போது அப்பாவின் புன்னகை, அம்மாவின் அரவணைப்பு, தங்கையின் முத்தம் அவனின் அனைத்து கஷ்டங்களையும் மறைய வைக்கும்.
ஒருவகையில் அனைவரும் சுயநலவாதிகள் தான் அவரவர் நேசிக்கும் நபர்களின் எண்ணிக்கை பொறுத்தே சுயநலச் சிந்தனையின் தன்மை வேறுபடுகிறது.
நான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல நான் என்னைப்பற்றி மட்டும் யோசிக்கும் ஒரு சுயநலவாதியாக இருந்து மக்களை பற்றி யோசிக்கும் சுயநலவாதியாக மாறியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நேசிப்பதற்கு பணம் ஏதும் தேவையில்லை மனம் இருந்தால் போதும். நான் உங்கள் அருகில் இருப்பவரை நேசிக்கிறேன், உங்கள் குடும்பத்தை நேசிக்கிறேன், இக்கட்டுரையை வாசித்த உங்களை மிகவும் நேசிக்கிறேன்!
சிந்திப்போம், நேசிப்போம்!
நன்றி
வேலையை தேர்ந்தெடுக்கும் பருவத்தில் இருபவர்களுக்காக:
மனிதகுலத்திற்காக பாடுபடக்கூடிய ஒரு வேலையினை நாம் தேர்வு செய்து கொண்டால் அதன்பின் எந்த கஷ்டமும் நம்மை எதுவும் செய்ய முடியாது, ஏனெனில் அவையெல்லாம் அனைவரின் நலனுக்குமான தியாகங்கள் அதன் பிறகு குறுகிய எண்ணம் கொண்ட வரம்புக்குட்பட்ட சுயநலம் கொண்ட மகிழ்ச்சியை நாம் ஒருபோதும் உணர மாட்டோம். நமது மகிழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மகிழ்ச்சியாக இருக்கும். நமது பணிகள் என்றென்றும் நினைவில் இருக்கும் நமது சாம்பல்கள் மீது புனிதமான மக்களின் சூடான கண்ணீர் சிந்தப்படும் - கார்ல் மார்க்ஸ்