எறும்பு
எறும்பு
மாத வருமானம் இருபதாயிரத்திற்கு கீழே இருக்கும் பட்சத்தில் அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கே தயங்கும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளின் இடையே ஊர்ந்து திரியும், அடர் நீல சீருடை அணிந்த எறும்புகளின் நேர்மை பற்றிய ஒரு குட்டிக் கதை இது.
தங்கள் ஊரில் உணவேதும் கிடைக்காமல், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் உணவைத் தேடி எறும்புகள் வந்தது, மேலே குறிப்பிட்ட பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைக்கு. ஒரு வழக்கமான எறும்பு, தன் கூட்டத்திற்கு (காலனி) உணவு சேகரிக்கச் செல்லும் வழியில், தன்னை நசுக்க வரும் கைகளிடம் தன் குடும்பத்தின் பசியைப் பற்றிச் சொல்லமுடியாமல், அக்கைகளின் மொழி அறியாது அஞ்சி ஓடிக்கொண்டிருக்கும். அதுபோல, இந்த சீருடை அணிந்த எறும்புகளும் தங்கள் உரிமைக்குக் குரல் கொடுக்க மொழி அறியாது ஓடிக்கொண்டிருக்கின்றன. பட்டதாரிகளின் விடுதியை சுத்தம் செய்வதே இந்த எறும்புகளின் வேலை.
ஒருநாள், ஒரு வேலை இல்லாத பட்டதாரி வேலைக்காக கணினியில் நடக்கும் தேர்வை முடித்துவிட்டு, களைப்பில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். அப்போது அறையின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அது ஒரு புதன்கிழமை மாலை என்பதால், அறையைச் சுத்தம் செய்வதற்காக எறும்புகள் வந்திருந்தன. அறையில் இருக்கும் செருப்புகளை எடுக்க, பட்டதாரி சலித்ததன் விளைவாக, ஒரு எறும்பு தன் கைகளால் அதைத் தூக்கிக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யத்தொடங்கியது. பின்னர், அடுத்த அறைக்குச் செல்லத் தயாரான எறும்புகள், அப்பட்டதாரியிடம் சுத்தம் செய்ததின் சாட்சியாகக் கையெழுத்துக் கேட்டன. தான் கையெழுத்திடப்போகும் தாளை உற்றுநோக்கிய பட்டதாரி, மற்ற அறையினர் போட்ட கையெழுத்தை அடையாளம் காண முயன்றான். ஆனால், அவை வெறும் கோடுகளும் புள்ளிகளுமாக இருந்தன.
அவற்றை எறும்புகள் வேலை செய்யாமல் தாங்களாகவே போட்டுக்கொள்ளலாமே என்றென்ணிய பட்டதாரி, தன்னைப் போல் மற்றொருவரின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று தெரிந்தும் தேர்வை பார்த்து எழுதும் நேர்மையற்றவராக அவ்வெறும்புகள் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்தான்.