கைக்கு எவ்வளவு வருது
கைக்கு எவ்வளவு வருது
வணக்கம்
இந்தப் பதிவோட தலைப்பு, உங்க வாழ்க்கையில பலமுறை உங்களுக்கு எதிராகக் கேட்கப்பட்ட கேள்வியா இருக்கலாம், இல்ல நீங்க இன்னொருத்தர் கிட்ட கேட்டிருக்கலாம்.
ஆனா, நம்ம இந்தக் கேள்விய ஏன் கேட்கிறோம்னு யோசிச்சதே இல்ல !
அக்கறையா !
அவங்களோட சூழ்நிலைய புரிஞ்சுக்கவா !
இல்ல நம்மள, அவங்களோட ஒப்பிட்டுப் பாக்கவா !
இந்த பதிவு இந்தக் கேள்விய கேட்கிறவங்களுக்கு தான்.
யாராவது என் சம்பளத்த கேட்டுட்டு, அவங்களோட சம்பளத்த சொல்லும்போது, நான் இன்னும் கொறச்சு சொல்லியிருக்கலாமோனு தோணும்; அவங்களுக்கு அவங்க மேலேயே ஒரு தாழ்வான எண்ணத்த கொடுத்திருமோனு தோணும். அதனாலேயே நானும் யாரையாவது விசாரிக்கும்போது, 'வேலை எப்படிப் போது ? பரவாயில்லையானு கேட்டு நிறுத்திக்க முயற்சி செய்வேன்.
ஒரு உண்மைய சொல்லனும்னா, நம்ம சந்தோஷம் நம்ம எவ்வளவு சம்பாதிக்கிறோம்ங்கிறத தாண்டி நிறைய விஷயத்தோட பின்னப்பற்றுக்கு.
சரியா !
அடுத்து, சின்ன வயசுல இருந்தே நம்ம தகுதிய ஒரு அளவுகோலாலும் ஒப்பிடலாலும் தான் நிர்ணயிக்கக் கத்துக் கொடுத்திருக்கு இந்த சமூகம். வேலைக்கு போன பிறகும் நம்ம தகுதிய முடிவு செய்ய நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்கனு நம்ம மேல ஒரு கேள்வியா வைக்கப்படுது; நம்மளும் அதே கேள்விய இன்னொருத்தர் கிட்ட கேக்குறோம்.
ஆனா, இந்த கேள்விய கேட்கிறதுக்கு முன்ன நம்ம யோசிக்க வேண்டிய ஒன்னு இருக்கு.
அவங்களோட குடும்ப பணப் பிரச்சனைய, நம்ம சரி செய்யப் போறோமா ?
அவங்க சம்பளத்த சொன்னதும் நம்ம ஏதாவது உதவி செய்யப் போறோமா ?
அப்படினா அத தெரிஞ்சுக்கறதுல நமக்கு என்ன கிடைக்குது
ஒருவேளை ஒரு சின்ன மன நிம்மதி.
“பரவாயில்ல… நாம ஜெயிச்சிட்டோம்.”
இல்ல
“அவங்களோட நம்ம தான் பெரிய ஆளுங்ற ஒரு உணர்வு.”
அவ்வளோதான்.
இனிமே ஒருத்தர்கிட்ட “கைக்கு எவ்வளவு வருது ?” னு கேட்கிறதுக்கு பதிலா
“சந்தோஷமாக இருக்கியா?”
“எல்லாம் ஓகேதானானு" கேட்கலாமா!
சின்ன வயசில, நம்ம வச்சிருந்த ஒரு மேஜிக் பென்சில் யார்கிட்டயும் இல்லங்கிறப்ப ஒரு பெருமைய தரும்; அந்த நேரத்தில் இதப் பாத்து யாரும் ஏக்கமடைவாங்கனு தெரியாது, ஆனா இப்போ கொஞ்சம் பெருசாகிட்டோம், அதனால எல்லாரையும் கொஞ்சம் நினச்சு பாப்போமே.
எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு இல்ல… சில விஷயங்கள தெரிஞ்சுக்காம இருக்கிறதுலயும் ஒரு மனிதநேயம் இருக்கு.
சிந்திப்போமா?